வாக்கு எண்ணிக்கை விவரம்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

"பதிவான வாக்கு எண்ணிக்கையை வேட்பாளர்கள் அல்லது அவர்களுடைய ஏஜென்டுகள் தவிர்த்து வேறு யாருக்கும் வழங்க வேண்டும் என்ற சட்ட விதி எதுவும் கிடையாது." - தேர்தல் ஆணையம்.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்ANI

வாக்குச் சாவடியில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கைகளை வெளியிடக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

வாக்குச் சாவடியில் பதிவாகும் மொத்த வாக்கு எண்ணிக்கை விவரங்களை, வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் 48 மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஏடிஆர் என்கிற அரசு சாரா அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் தேர்தல் ஆணையம் உடனடியாக வெளியிடும் வாக்கு சதவீத தரவுகளுக்கும், தேர்தல் ஆணையம் இறுதியாக வெளியிடும் வாக்குபதிவு சதவீத தரவுகளுக்கும் பெரிதளவில் வித்தியாசம் இருப்பதாக ஏடிஆர் அமைப்பு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, 17சி படிவத்தின் பகுதியை இணையத்தில் வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், பதிவான வாக்கு எண்ணிக்கையை வேட்பாளர்கள் அல்லது அவர்களுடைய ஏஜென்டுகள் தவிர்த்து வேறு யாருக்கும் வழங்க வேண்டும் என்ற சட்ட விதி எதுவும் கிடையாது என்று தெரிவித்தது. மேலும், தேர்தல் ஆணையம் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும், இது தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் குழப்பும், சந்தேகத்தை எழுப்பும் என்றும் தேர்தல் ஆணையம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், வழக்கில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதற்கு மத்தியில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றம் இந்த மனு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in