அறுவடைக்குப் பிறகான கதிர்களை எரிப்பதைத் தடுப்பதில் பஞ்சாப், ஹரியாணா மாநில அரசுகள் காட்டிய அலட்சியப்போக்கை இன்று (அக்.16) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது கடுமையாகக் கண்டித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
அறுவடைக்குப் பிறகு வயல்களில் மிஞ்சியிருக்கும் காய்ந்த நெற்பயிரை அங்கேயே வைத்து எரிப்பது வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையாகும். இந்த நிகழ்வு ஆங்கிலத்தில் ஸ்டபிள் பர்னிங் (stubble burning) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் நெற்களஞ்சியங்களான பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இந்த ஸ்டபிள் பர்னிங் நிகழ்வுகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் மட்டும் ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சுமார் 15 மில்லியன் டன் கணக்கிலான நெல் அறுவடை செய்யப்படுகிறது. அதன்பிறகு அம்மாநில வயல்களில் மிஞ்சியிருக்கும் காய்ந்த நெற்பயிர்கள் அங்கேயே வைத்து எரிக்கப்படுகின்றன.
இதனால் அருகில் இருக்கும் தலைநகர் தில்லியில் குளிர்காலங்களில் கடுமையான காற்றுமாசு ஏற்படுகிறது. சட்டப்படி இவ்வாறு எரிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும், இம்மாநில விவசாயிகள் இவ்வாறு எரிக்கும் முறையை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் பலமுறை இம்மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்த ஸ்டபிள் பர்னிங் விவகாரத்தில் தங்களின் உத்தரவுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது `தேசிய தலைநகர் பகுதிக்கான காற்று தர மேலாண்மை ஆணையம்’. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இதில் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்ற அமர்வு, காற்று தர மேலாண்மை ஆணையம் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பித்த பிறகும் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் ஸ்டபிள் பர்னிங் நிகழ்வுகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஓகா: `ஹரியாணா மாநில அதிகாரிகளுக்கு எதிராக காற்று தர மேலாண்மை ஆணையம் சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வரும் அக்.23-ல் ஹரியாணா தலைமைச் செயலாளர் உச்ச நீதிமன்றத்தின் முன்பு ஆஜராகி நேரில் விளக்கமளிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஸ்டபிள் பர்னிங்கில் ஈடுபடும் நபர்கள் ஒருவர் மீது கூட பஞ்சாபில் வழக்குப் பதியவில்லை. உத்தரவுகள் முற்றிலுமாக மீறப்பட்டுள்ளன’ என்றார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் அக்.23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.