
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளிகளை விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 24) நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது. அதேநேரம் விடுவிக்கப்பட்ட 12 பேர் மீண்டும் கைது செய்யப்படமாட்டார்கள் என்று குறிப்பிட்டது.
மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிர மாநில அரசு தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையின்போது, உயர் நீதிமன்றத்தின் விடுதலை நடவடிக்கையை முன்னுதாரணமாகக் கருதக்கூடாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
`அனைத்து பிரதிவாதிகளும் விடுவிக்கப்பட்டனர், எனவே அவர்களை மீண்டும் சிறைக்குக் கொண்டுவருவது தொடர்பாக எந்த கேள்வியும் இல்லை. இருப்பினும், சட்டத்தின் கேள்வியைப் பொறுத்தவரை இந்த (மும்பை உயர் நீதிமன்றத்தின்) தீர்ப்பு வேறு எந்த வழக்குகளிலும் முன்னுதாரணமாகக் கருதப்படாது என்று நாங்கள் கூறுவோம். எனவே, அந்த வகையில், தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
ஒரு குற்றவாளியை விடுவிப்பதற்குத் தடை விதிப்பது `அரிதிலும் அரிதான’ நிகழ்வு என்று இந்த வழக்கு மீதான விசாரணையின்போது நேற்று (ஜூலை 23) உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மஹாராஷ்டிர மாநில அரசு சார்பில் வழக்கு விசாரணையில் ஆஜரான மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, `உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மஹாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (MCOCA) கீழ் நடைபெறும் பிற விசாரணைகளைப் பாதிக்கக்கூடும்’ என்று கூறியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்புலம்
உலகின் மிகவும் பரபரப்பான நகர்ப்புற ரயில் பாதைகளில் ஒன்றான மும்பையின் புறநகர் ரயில் வலையமைப்பின் மேற்கு வழித்தடத்தில், கடந்த 11 ஜூலை 2006 அன்று தொடர்ச்சியாக ஏழு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தேறின. இதில் 189 பேர் கொல்லப்பட்டனர், 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2015-ம் ஆண்டில், குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் ஐந்து பேருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் சிறப்பு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது, ஒருவர் விடுவிக்கப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் கொரோனா தொற்றால் 2021-ல் இறந்தார்.
கடந்த ஜூலை 21 அன்று நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய மும்பை உயர் நீதிமன்ற அமர்வு, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்தது.
`குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்க அரசுத் தரப்பு முற்றிலும் தவறிவிட்டது’ என்று உயர் நீதிமன்றம் கூறியது.