நீதிமன்றங்களின் அனுமதியின்றி வரும் அக்.1 வரை கட்டடங்களை புல்டோசர் வைத்து இடிக்க நாடு முழுவதும் தடை விதித்து இன்று (செப்.17) உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
புல்டோசர் நீதி என்ற பெயரில் தீவிரமான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களை இடிக்கும் வழக்கத்தை பின்பற்றிவரும் உ.பி. போன்ற மாநில அரசுகளின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த செப்.2-ல் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோரைக் கொண்ட அமர்வு மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் இந்த வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையில், அக்.1 வரை கட்டடங்களை புல்டோசர் வைத்து இடிக்க நாடு முழுவதும் தடை விதித்தனர் நீதிபதிகள்.
அதே நேரம் சட்டவிரோதமாக அரசுக்குச் சொந்தமான இடங்கள், பொது வழித்தடங்கள், இந்திய ரயில்வேயிக்குச் சொந்தமான இடங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட எந்த ஒரு கட்டடத்தையும் இடிக்கத் தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
மேலும், 1997-ல் பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் வகையில் விஷாகா வழிகாட்டுதல் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டதுபோல, வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களை இடிக்க புல்டோசர்களை உபயோகித்து மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படும் எனவும் நீதிபதிகள் இன்று அறிவித்துள்ளனர்.