உச்ச நீதிமன்றத்தால் கிடைத்த ஐஐடி வாய்ப்பு: உ.பி. தலித் மாணவருக்கு நடந்தது என்ன?

"இயலாமையால் மட்டுமே கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை. நாம் இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்."
உச்ச நீதிமன்றத்தால் கிடைத்த ஐஐடி வாய்ப்பு: உ.பி. தலித் மாணவருக்கு நடந்தது என்ன?
2 min read

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயதுடைய அதுல் குமார். இவருடைய தந்தை நாளொன்றுக்கு ரூ. 450 மட்டுமே ஈட்டக்கூடிய தினக் கூலி. அதுல் குமார் ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) 2024 தேர்வு எழுதினார். இந்தத் தேர்வு முடிவில் இவருடையப் பிரிவின் தரவரிசையில் 1,455-வது இடம் பிடித்தார் அதுல் குமார். இவருக்கு ஐஐடி தன்பாத்தில் பி.டெக் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய சகோதரர்கள் இருவர் ஐஐடி கரக்பூர் மற்றும் என்ஐடி ஹமீர்புரில் படித்து வருகிறார்கள்.

எதனால் வாய்ப்பு பறிபோனது?

ஐஐடி தன்பாத்தில் படிக்க ரூ. 17,500 கட்டணம் செலுத்த வேண்டும். தந்தை தினக் கூலி என்பதால் இந்தக் கட்டணத்தைத் திரட்டுவது சவாலாக இருந்தது. ஒருவழியாக கிராமத்தினர் மூலம் ரூ. 17,500 சேகரித்துவிட்டு, கட்டணமாகச் செலுத்த முயற்சித்துள்ளார்கள். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஜூன் 24, மாலை 5 மணி. அதுல் குமாரின் குடும்பத்தினரால், ஜூன் 24 மாலை 4.45 மணிக்கு தான் பணத்தைத் திரட்ட முடிந்திருக்கிறது. அதுல் குமார் தன்னுடைய ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து முடிப்பதற்குள் நேரம் மாலை 5-ஐ கடந்து கால அவகாசம் முடிந்தது. இதனால், ஐஐடி தன்பாத் வாய்ப்பு அதுல் குமாருக்கு பறிபோனது.

கைவிடாத விடாமுயற்சி

இருந்தபோதிலும் மகனின் படிப்புக்காக தந்தை கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். ஐஐடி சென்னையில் தேர்வு நடத்தும் அதிகாரியிடம் தன்னுடைய நிலை குறித்து விளக்கினார். இதன்பிறகு, சட்ட உதவிகள் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றத்தில் முறையிடுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஐஐடி வாய்ப்பைப் பெற்று தந்த உச்ச நீதிமன்றம்

இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன்படி தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐஐடி தன்பாத்தில் அதுல் குமாரைச் சேர்த்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியதாவது:

"இதுபோன்ற திறமையான இளம் மாணவர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஜார்க்கண்ட் மற்றும் சென்னையில் சட்ட உதவிகளை வழங்கும் அமைப்புகளை அணுகியிருக்கிறார். உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். தலித் மாணவரான இவர் பெரிதளவில் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார்.

விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த திறமையான மாணவன் அதுல் குமார். ஐஐடியில் இடம் கிடைப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறார். இவருக்கு வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது. இதுபோன்ற சூழல்களில் நீதியைக் கடைபிடிப்பதற்காக அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் கீழ் சிறப்பு அதிகாரம் உள்ளது.

ஐஐடி தன்பாத்தில் அதுல் குமாருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அவர் உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தியிருந்தால், எந்த பேட்சில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ, அதை பேட்சில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என ஐஐடி தன்பாத்தை அறிவுறுத்துகிறோம். இவருடைய இயலாமையால் மட்டுமே கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை. நாம் இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

இறுதியில், இந்த மாணவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வாழ்த்துகள் தெரிவித்தார்.

இதனால் நிம்மதி பெருமூச்சுவிட்ட மாணவர் அதுல் குமார், தடம்புரண்ட ரயில் மீண்டும் பயணத்தைத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in