உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துப் பட்டியல் வெளியீடு!

1978-79 முதல் வருமான வரி செலுத்தி வரும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, கடந்த 31 மார்ச் 2025-ல் ரூ. 55.75 லட்சத்தை நிரந்தர வைப்பாக வங்கியில் செலுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துப் பட்டியல் வெளியீடு!
1 min read

உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகளின் சொத்து விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வெளியாகியுள்ளது.

நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், நீதிபதிகளின் சொத்து விவரங்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட கடந்த ஏப்.1 அன்று உச்ச நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மொத்தமுள்ள 33 நீதிபதிகளில், 21 நீதிபதிகளின் சொத்துப் பட்டியலை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இன்று (மே 6) வெளியிட்டுள்ளார்.

தலைமை நீதிபதியின் சொத்து விவரங்கள்:

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வசம், தெற்கு தில்லியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் மூன்று படுக்கை வசதி கொண்ட ஒரு குடியிருப்பும், தில்லி காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் சுமார் 2,446 சதுர அடியில் நான்கு படுக்கை வசதி கொண்ட ஒரு குடியிருப்பும் உள்ளது.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள நான்கு படுக்கை வசதி கொண்ட குடியிருப்பில், 56% பங்குகள் இவரிடமும், 44% பங்குகள் இவரது மகளிடமும் உள்ளன.

1978-79 முதல் வருமான வரி செலுத்தி வரும் சஞ்சீவ் கன்னா, கடந்த 31 மார்ச் 2025-ல் ரூ. 55.75 லட்சத்தை நிரந்தர வைப்பாக வங்கியில் செலுத்தியுள்ளார். கடந்த 1989-ல் தொடங்கப்பட்ட வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் ரூ. 1.06 கோடி வைப்புத் தொகையாக உள்ளது.

புதிய தலைமை நீதிபதியாக வரும் மே 14-ல் பி.ஆர். கவாய் பொறுப்பேற்கவுள்ளார். அவரது சொத்து விவரங்கள்:

மஹாராஷ்டிர மாநிலம் அமராவதியில் ஒரு வீடு உட்பட தன் தந்தையிடம் இருந்து பெற்ற சொத்துகள் அவர் வசம் உள்ளன. மேலும் சொந்த முயற்சியின்பேரில், மும்பையின் பாந்த்ரா மற்றும் தில்லியின் டிஃபென்ஸ் காலனியில் வாங்கப்பட்ட குடியிருப்புகளும் அவர் வசம் உள்ளன.

அத்துடன், அமராவதியிலும், நாக்பூரிலும் கவாய்க்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. அவரது வருங்கால வைப்பு நிதி கணக்கில் ரூ. 6.59 லட்சமும், பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் ரூ. 35.86 லட்சமும் உள்ளன.

மேலும் ரூ. 5.25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், வங்கிக் கணக்கில் ரூ. 19.63 லட்சமும் அவரிடம் இருக்கின்றன. அதோடு, அவரது குடும்ப சொத்தின் மீது ரூ. 1.07 கோடிக்கு கடன் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://www.sci.gov.in/assets-of-judges/

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in