சிறைகளுக்குள் சாதிய பாகுபாடு: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

உயர் சாதி குற்றவாளிகளை சமையல் பணிகளிலும், பட்டியல் சாதி குற்றவாளிகளை தூய்மைப் பணிகளிலும் ஈடுபடுத்த மேற்கு வங்க மாநில சிறை விதிகள் வழிவகை செய்கிறது.
சிறைகளுக்குள் சாதிய பாகுபாடு: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
PRINT-83
1 min read

சிறைகளில் சாதிய பாகுபாடு இருந்தால் அதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், சில மாநிலங்களின் சிறை கையேடுகளில் உள்ள சாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் விதிகளை நீக்க உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுகன்யா ஷாந்தா என்பவர் கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வரும் சிறை விதிகள் மூலம், அம்மாநில சிறைகளுக்குள் சாதியை அடிப்படையாக வைத்து வேலைகளும், தங்குமிடங்களும் பிரிக்கப்படுகின்றன என்று கூறி இந்த நடைமுறைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

குறிப்பாக, உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த குற்றவாளிகளை சமையல் பணிகளிலும், பட்டியல் சாதிகளைச் சேர்ந்த குற்றவாளிகளை தூய்மைப் பணிகளிலும் ஈடுபடுத்த மேற்கு வங்க மாநில சிறை விதிகள் வழிவகை செய்கிறது என தன் மனுவில் ஆதாரத்துடன் குறிப்பிட்டிருந்தார் சுகன்யா ஷாந்தா.

கடந்த ஜனவரியில் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க சம்மந்தப்பட்ட 11 மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, `சிறைகளில் சாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது. அவ்வாறு சாதிய பாகுபாகு இருந்தால் அதற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். கைதிகளை மனிதாபிமானமற்ற முறையில் வேலை செய்ய வைத்தால் அதற்கும் மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்’ என்றனர்.

மேலும், 3 மாதங்களுக்குள் முறையான சட்ட திருத்தங்கள் கொண்டுவந்து இத்தகைய சிறை விதிகளை நீக்கவேண்டும் என்று சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in