
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களுடைய சொத்து விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தின் வளாகத்தில் கடந்த மார்ச் 14 அன்று நிறைய பணம் கண்டெடுக்கப்பட்டன. இவ்விவகாரம் பெரும பூதாகரமானது. இதைத் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான முதற்கட்ட விசாரணை தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பொதுவெளியில் பகிர்ந்துகொண்டார்.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா அலஹாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நீதித் துறை மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களுடைய சொத்து விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இதுதொடர்புடைய தீர்மானம் ஒன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களுடைய சொத்து விவரங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஏற்கெனவே இருக்கும் நடைமுறை. இதை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பது கட்டாயமல்ல. தற்போது எடுக்கப்பட்ட முடிவு மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவுள்ளன. சொத்து விவரங்களை எப்படி வெளியிடுவது எந்தத் தளத்தில் வெளியிடுவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களுடைய சொத்து விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட்ட பிறகு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் இந்த நடைமுறையைப் பின்பற்றலாம் எனக் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களுடைய சொத்து விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடுவது இது முதன்முறையல்ல. 1997-ல் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜேஎஸ் வர்மா தலைமையில் நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களுடைய சொத்து விவரங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இது பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
பிறகு, செப்டம்பர் 8, 2009-ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் சேர்ந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். நீதிமன்றத்தின் இணையப் பக்கத்தில் நீதிபதிகளின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டது. ஆனால், விருப்பத்தின் பெயரிலேயே சொத்து விவரங்களை வெளியிடலாம் என ஒரு குறிப்பு தீர்மானத்தில் இடம்பெற்றது.
2018 முதல் நீதிபதிகள் விருப்பத்தின் பெயரிலும் சொத்து விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடும் வழக்கம் நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது.