
இந்தியாவில் நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் (இவிஎம்கள்), தணிக்கைச் சீட்டுகள் (விவிபாட்) உபயோகிக்கப்படும். இதை வைத்துத் தாங்கள் வாக்களிக்கும் வேட்பாளருக்குத் தங்களின் வாக்குகள் பதிவாகியுள்ளதா என்று வாக்காளர்கள் வாக்கு மையத்திலேயே சரி பார்க்க முடியும்.
ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்கள்) வாக்குகள், தணிக்கைச் சீட்டுகளுடன் (விவிபாட்) 100 சதவீதம் சரிபார்க்கப்படுவதில்லை.
இதை ஒட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்கள்) வாக்குகள், தணிக்கைச் சீட்டுகளுடன் (விவிபாட்) 100 சதவீதம் சரி பார்க்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஏப்ரல் 26-ல் இந்த வழக்கு மீது இறுதித் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்கள்) வாக்குகளை, வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கைச் சீட்டுகளுடன் (விவிபாட்) 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்ற மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, மறு ஆய்வு செய்யக் கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோரைக் கொண்ட அடங்கிய அமர்வு, ஏப்ரல் 26 வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய எந்த காரணமும் இல்லை என்று கூறி மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
இது குறித்து, “மறு ஆய்வு மனுவை நாங்கள் ஆராய்ந்தோம். ஏப்ரல் 26-ல் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான எந்தக் காரணம் இல்லை. எனவே இந்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் இறுதி உத்தரவில் தெரிவித்தனர்.