கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கு: அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
ANI

கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கு: அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

10 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் இருந்த கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அமலாக்கத் துறை பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பயுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 10 நாள்களுக்கு அமலாக்கத் துறை காவலில் இருந்த கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, தனது கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்றக் காவலை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது அல்ல என்று தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில் மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, அரசியல் உள்நோக்கத்துடன் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபன்கர் தட்டா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது ஏப்ரல் 24-க்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 29-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in