
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இளநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகளை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தேசிய தேர்வு முகமை இன்று (ஜூலை 15) உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த மனு தொடர்பாக பதிலளிக்க சம்மந்தப்பட்ட மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
தேசிய தேர்வு முகமை அளித்த மனு மீது விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கு தொடர்பாக சம்மந்தப்பட்ட மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஒப்புக்கொண்டது. அதே நேரம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணைக்குத் தடை கேட்டு தேசிய தேர்வு முகமையின் வழக்கறிஞர் எழுப்பிய கோரிக்கையை, ஏற்க மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம்.
இதே போல, கடந்த ஜூன் 20-ல் நீட் இளநிலை தேர்வு `வினாத்தாள் கசிவு’ தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணைகளுக்குத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தின் வழியாக, `ஐஐடி நடத்திய தரவு பகுப்பாய்வின்படி, இந்த வருடம் மே 5-ல் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகளோ அல்லது உள்ளூர் தேர்வர்கள் பயனடைவதற்கான அறிகுறிகளோ தென்படவில்லை’ என்று உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது தேசிய தேர்வு முகமை.
இளநிலை நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை ஜூலை 18-ல் நடக்க உள்ளது.