
இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகளை சம்பவங்களை குறைக்கும் நோக்கில் உச்ச நீதிமன்றம் 15 வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை இதில் அடங்கும்.
கடந்த 2023-ல் ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், விசாகப்பட்டினத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்நிலையில் கடந்த 14 ஜூலை 2023-ல் அந்த மாணவி உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மாணவியின் தந்தை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 14 பிப்ரவரி, 2024 அன்று அந்த கோரிக்கையை அம்மாநில உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, படிப்பு மற்றும் தேர்வு சார்ந்த மன அழுத்தம் மற்றும் ஆசிரியர்கள், கல்வி நிறுவனம் ஆதரவு வழங்காமை போன்ற காரணங்களால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டது.
மேலும், மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைகளை சம்பவங்களை குறைக்கும் நோக்கில் 15 வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது
கட்டாய மனநல ஆலோசனை, குறை தீர்க்கும் நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வை போன்ற நடவடிக்கைகளை அனைத்து கல்வி அமைப்புகளிலும் மேற்கொள்ள இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் கோருகின்றன.
கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்களும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் இரண்டு முறையாவது கட்டாய மனநலப் பயிற்சியைப் பெறவேண்டும் என்று நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
சான்றளிக்கப்பட்ட மனநல நிபுணர்களால் நடத்தப்படும் இந்தப் பயிற்சியானது உளவியல் முதலுதவி, துயர எச்சரிக்கையின் அறிகுறிகளை அங்கீகரித்தல், சுய-தீங்கிற்கு பதிலளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களை பாகுபாடற்ற நிலையில் அணுகும் முறையை கடைபிடிக்க, ஊழியர்கள் தயாராக இருப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவியின் தற்கொலை வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.