
சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இலங்கைத் தமிழர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. `உலகம் முழுவதிலும் இருந்து வரும் அகதிகளை தங்க வைக்கக்கூடிய தர்மசத்திரம் இந்தியா அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சொந்த நாட்டிற்குத் திரும்பினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்டு, நாடு கடத்தல் நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பளிக்குமாறு இலங்கை நாட்டைச் சேர்ந்த தமிழரான சுபாஸ்கரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற மனுதாரர் 7 ஆண்டு சிறைத்தண்டனையை முடித்தவுடன், உடனடியாக அவரை நாடு கடத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, `உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? 140 கோடி மக்கள்தொகையுடன் நாங்கள் ஏற்கனவே போராடி வருகிறோம். அனைத்து இடங்களிலிருந்தும் வெளிநாட்டினரை வரவேற்கக்கூடிய தர்மசத்திரம் இதுவல்ல’ என்றனர்.
முறையான விசா பெற்று இந்தியாவிற்குள் நுழைந்த மனுதாரர், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அவரது உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்வார் என்று சுபாஸ்கரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார். மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், `(அப்படியென்றால்) வேறு ஏதாவது நாட்டிற்குச் செல்லுங்கள்’ என்றனர்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19-ன் கீழ் இந்தியாவில் குடியேறுவதற்கான அடிப்படை உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உள்ளது என்று விசாரணையின்போது நீதிபதி தத்தா தெளிவுபடுத்தினார்.