
உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க, தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக லோக்பால் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
கடந்த 2014-ல் அமலுக்கு வந்த லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் கீழ், தலைநகர் தில்லியில் லோக்பால் அமைப்பு நிறுவப்பட்டது. பிரதமர் முதல் குரூப் டி பிரிவு பணியாளர்கள் வரையிலான மத்திய அரசுப் பதவிகளில் இருக்கும் நபர்கள் மேற்கொள்ளும் ஊழல்களை விசாரிக்கும் அதிகாரம் இந்த அமைப்புக்கு உள்ளது.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான லோக் பால், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க லோக் பால் சட்டத்தின் கீழ் தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக கடந்த மாதம் அறிவித்து உத்தரவு பிறப்பித்தது.
தனக்கு வேண்டிய ஒரு நபருக்கு சாதகமான தீர்ப்பைப் பெற, கூடுதல் மாவட்ட நீதிபதி ஒருவரிடம் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர். இந்த அதிகார துஷ்பிரயோக வழக்கு விசாரணையின்போது, அந்த குறிப்பிட்ட உத்தரவை லோக் பால் அமைப்பு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணைக்கு எடுத்தது உச்ச நீதிமன்றம். நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யகாந்த், அபய் எஸ். ஓகா ஆகியோரைக் கொண்ட அமர்வு இன்று (பிப்.20) காலை இது தொடர்பாக விசாரித்தது.
அப்போது, அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தபிறகு உயர் நீதிமன்ற நீதிபதி பதவி அரசியலமைப்பு பதவி என்றும், லோக் பால் உறுப்பினர்களைப் போல அது சட்ட அடிப்படையிலான பதவி அல்ல என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தார்கள்.
இந்த விசாரணையில் பங்கேற்று வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், லோக் பால் உத்தரவை விமர்சித்தார். அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பான லோக் பால் உத்தரவிற்கு இடைக்காலத் தடை பிறப்பித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் லோக்பால் அமைப்பு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.