மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரமில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு | Supreme Court of India |

14 கேள்விகள் கேட்டு குடியரசுத் தலைவர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு...
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)ANI
1 min read

மசோதாக்களுக்குப் பதிலளிக்காமல் நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் கிடையாது என்றும், ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் குறிப்பிட்ட கால வரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில், கடந்த ஏப்ரல் 8 அன்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனக் காலக்கெடு விதிக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு குறித்த தெளிவுரை கோரி 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் அனுப்பினார். இதுகுறித்து தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த் ஆகஸ்ட் 19-ல் தொடங்கி 10 நாள்கள் விசாரணை நடத்தியது. இதன் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக் காலம் வரும் 23 -ல் முடிவடையும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த மசோதா காலக்கெடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

”மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கையும் எடுக்காமல், எந்தவித பதிலும் அளிக்காமல் ஆளுநர்களால் நிறுத்தி வைக்க முடியாது. கால வரம்பின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குதல், நிராகரித்தல் மற்றும் விளக்கத்துடன் சட்டப்பேரவைக்கு அனுப்புதல் அல்லது அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புதல் ஆகிய மூன்று தெரிவுகள் மட்டுமே ஆளுநருக்கு உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றை ஆளுநர் தேர்ந்தெடுக்க விருப்புரிமை உள்ளது.

மசோதவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஒரு மாநிலத்துக்கு இரண்டு அதிகார அமைப்புகள் இருப்பதை ஏற்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும்தான் மாநிலத்தில் இயக்கும் முதன்மையான அதிகார அமைப்பாக இருக்க முடியும். ஆளுநர்கள் மாநில அரசுக்கு இடையூறு விளைவிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ளக் கூடாது.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Supreme Court has opined that courts’ cannot set timelines for the President and Governors to grant assent to bills passed by the State legislature.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in