
ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று (மே 21) இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, கருத்துக்களைப் பதிவிட்ட நேரத்திற்காக பேராசிரியர் மஹ்முதாபாத்தை கடுமையாகச் சாடியது. எனினும், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
அலி கான் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரிக்க, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை 24 மணி நேரத்திற்குள் அமைக்குமாறு ஹரியானா மாநில காவல்துறை இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அந்த காவல்துறை அதிகாரிகள் ஹரியாணா மற்றும் தில்லியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்றும், அதில் ஒருவர் பெண்ணாக இருக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக எந்தவிதமான கருத்தையும் பதிவிடக்கூடாது என்றும், பொதுவெளியில் பேசக்கூடாது என்றும் மஹ்முதாபாத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அத்துடன், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், அதன் தொடர்ச்சியாக இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற மோதல் குறித்தும்கூட பேசக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் விளக்கமளித்த நிகழ்வை கேள்விக்குள்ளாக்கும் வகையில், சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக, கடந்த மே 18 அன்று ஹரியாணா காவல்துறையினரால் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான உத்தரவை நேற்று (மே 20) ஹரியாணா நீதிமன்றம் வழங்கியது.