தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் பிஆர்எஸ் சட்டமேலவை உறுப்பினரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதாவை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 15-ல் கைது செய்தது. தொடர்ந்து ஏப்ரல் 11-ல் இதே வழக்கில் சிபிஐயும் கவிதாவைக் கைது செய்தது.
கைது நடவடிக்கையை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கவிதா சார்பில் பிணை கோரி முறையிடப்பட்டது. இவரது மனுவை தில்லி உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கவிதா மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்தது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ பதிலளிக்கக்கோரி ஆகஸ்ட் 12-ல் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா என அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயிடம் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வழக்குகளிலிருந்து கவிதாவுக்குப் பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.