எங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது: கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம்!

சட்ட ஒழுங்கு பிரச்னையை உரிய வகையில் கையாள, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 355-ன் கீழ் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு வழக்குத் தொடப்பட்டது.
எங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது: கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம்!
1 min read

அரசியலமைப்புச் சட்டம் நிர்ணயித்த வரம்புகளை மீறியதாகக் குற்றம்சாட்டப்படுவது குறித்து, இன்று (ஏப்.21) மேற்கு வங்க மாநிலம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

அண்மையில் அமலுக்கு வந்த, வக்ஃபு திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த ஏப்.11 அன்று மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில், மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம், கலவரமாக உருமாறியது. இதில் இருவர் மரணமடைந்தது மட்டுமல்லாமல், பலரும் காயமடைந்தனர். அத்துடன் வீடுகள் உள்ளிட்ட பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதாரம் ஏற்பட்டது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கு பிரச்னையை உரிய வகையில் கையாள, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 355-ன் கீழ் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

பாதுகாப்புக்காக மத்திய படைகளை மேற்கு வங்கத்தில் குவிக்க உத்தரவிடுமாறு தன் மனுவில் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் பி.ஆர். கவாய், அகஸ்டைன் ஜார்ஜ் மாஸிஹ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, `மத்திய அரசுக்கு வழிகாட்டுதல் உத்தரவை நாங்கள் பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? தற்போதுள்ள நிலையில், நாடாளுமன்ற மற்றும் நிர்வாக செயல்பாடுகளை நாங்கள் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது’ என்று குறிப்பிட்டு நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராகத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த செயலை, குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தன்கர் கடந்த வாரம் கடுமையாக விமர்சித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் ஷர்மா ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தைக் காட்டமாக விமர்சித்தனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இந்த வழக்கு மீதான முழுமையான விசாரணை நாளை (ஏப்.22) நடைபெறவுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in