
தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்புடைய மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேர்தல் நிதி பத்திரங்கள் நடைமுறை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் இதை ரத்து செய்தது. தேர்தல் நிதி பத்திரங்கள் நடைமுறை என்பது எஸ்பிஐ வங்கியிடமிருந்து தேர்தல் நிதி பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு, அதை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இந்தத் தேர்தல் நிதி பத்திரங்களை எஸ்பிஐ வங்கி மூலம் அரசியல் கட்சிகள் பணமாக மாற்றிக்கொள்ளலாம்.
இந்த நடைமுறையில் அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்கியவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது. இதற்காக 2017-ல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல் நிதி பத்திரங்கள் நடைமுறையால் ஆளும் மத்திய அரசு அதிகளவில் பலனடைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்தல் நடைபெற்றதாகப் பெரிய விமர்சனம் வைக்கப்பட்டது. குறிப்பாக மத்திய பாஜக ஆட்சி மீது இது அழுத்தமாக வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தேர்தல் நிதி பத்திரங்கள் நடைமுறையை கடந்த பிப்ரவரி 15-ல் ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தார்கள். இதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு செப்டம்பர் 25-ல் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது இணையத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டது.