
நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை `சம்பாதித்துப் பெறவேண்டும்’, அதை `கட்டளையிட்டுப் பெற முடியாது’ என இன்று (மே 13) ஓய்வு பெற்றவுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவருக்கான பிரியாவிடை நிகழ்ச்சியின்போது உரையாற்றியுள்ளார்.
51-வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்தாண்டு 11 நவம்பர் அன்று பொறுப்பேற்ற சஞ்சீவ் கன்னா, இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். நீதிபதிகள் ஓய்வுபெறும்போது நடைபெறும் சம்பிரதாயமான அமர்வு கூட்டத்தில் பேசிய தலைமை நீதிபதி கன்னா, `நல்வாழ்த்துகளில் திளைத்ததாக’ கூறினார்.
மேலும், `என்னுடன் பல நினைவுகளைச் சுமந்து செல்கிறேன். மிகவும் இனிமையான நினைவுகளான அவை எப்போதும் (என்னுள்) நிலைத்திருக்கும். நீங்கள் ஒரு வழக்கறிஞரானவுடன், எப்போது நீங்கள் வழக்கறிஞராகவே இருப்பீர்கள்’ என்றார்.
நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மூலமாகவே பெறவேண்டும் என்று சஞ்சீவ் கன்னா கூறினார். மேலும் அவர் பேசியதாவது,
`நீதித்துறை என்பது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் என இரு தரப்பினரையும் குறிக்கும் ஒரு பொதுவான சொல். நீங்கள் (வழக்கறிஞர்கள்) மனசாட்சியைக் காப்பவர்கள். நீதிமன்றத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நீதிபதிகள் உள்ளனர். நாங்கள் பல்வேறு குறித்து விவாதிக்கும்போது, அவர்களால் வெவ்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்ட முடியும்’ என்றார்.
தானும், தனக்குப் பிறகு தலைமை நீதிபதியாக உள்ள பி.ஆர். கவாயும் ஒரே ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றதை சஞ்சீவ் கன்னா நினைவு கூர்ந்தார். `நீதிபதி கவாய் தலைசிறந்த தலைமை நீதிபதியாக இருப்பார்’ என்றும், `அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டத்தின் அடிப்படையான கோட்பாடுகளை அவர் நிலைநிறுத்துவார்’ என்றும் கன்னா கூறினார்.