
பட்டியலின இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். ஈவி சின்னையா vs ஆந்திரப் பிரதேச அரசு வழக்கில் 2004-ல் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக பட்டியலின இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
"பட்டியலினத்தில் உள்ள சாதிகள் ஒரேவிதமானது அல்ல என்பதை வரலாறு மற்றும் நடைமுறையிலுள்ள ஆதாரங்கள் கூறுகின்றன" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்ப்பின் மூலம் பட்டியலினத்தவர்களுக்கான 15% இடஒதுக்கீட்டில், பின்தங்கியவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம். இதன்மூலம், பட்டியலின இடஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு வழங்கப்படும் உள்ஒதுக்கீடு பிரச்னையும் முடிவுக்கு வந்துள்ளது.
பட்டியலின இடஒதுக்கீட்டில் மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஈ.வி. சின்னையா தீர்ப்பு குறிப்பிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பிஆர் கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மிதல், மனோஜ் மிஸ்ரா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். நீதிபதி பேலா எம் திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
பட்டியலின, பழங்குடியின இடஒதுக்கீட்டில் நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வரும் பிரிவினரும் இருக்கிறார்கள். பட்டியலின, பழங்குடியின இடஒதுக்கீட்டில் கிரீமி லேயரை கண்டறிய அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என நீதிபதி பிஆர் கவாய் தெரிவித்தார்.