
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிஹாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் வழங்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் இன்று (ஆக. 6) உத்தரவிட்டுள்ளது.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களையும், ஏற்கனவே அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட தரவுகளையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் பூயான் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதன் நகலை ஜனநாயக சீர்திருத்த சங்கத்திற்கும் (ADR) வழங்குமாறு தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞரிடம் கூறியது.
பிஹார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (SIR) நடவடிக்கைக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள அரசு சாரா நிறுவனமான ஜனநாயக சீர்திருத்த சங்கம், நீக்கப்பட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிடக்கோரி புதிய விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
வரைவு வாக்காளர் பட்டியல் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளதால் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கான காரணம் விரைவில் தெரியவரும் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணிடம், உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.
`சில அரசியல் கட்சிகளுக்கு நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் அதில் வாக்காளர்கள் இறந்துவிட்டார்களா அல்லது இடம்பெயர்ந்துவிட்டார்களா என்பது குறிப்பிடப்படவில்லை’ என்றும் பூஷண் வாதிட்டார்.
கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பிய 75% வாக்காளர்கள், 11 ஆவணங்கள் அடங்கிய பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் பூத் அதிகாரிகள் (BLO) பரிந்துரையின்பேரில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் பூஷண் குற்றம்சாட்டினார்.
சிறப்பு தீவிர திருத்தத்திற்கான தேர்தல் ஆணையத்தின் ஜூன் 24-ம் தேதியிட்ட உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்குவதாகவும், அந்த நாளில் வாதங்களை முன்வைக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.