
மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பருக்கு எதிராக தேச துரோக வழக்கில் சம்மன் வழங்கியதற்காக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
`தி வயர்’ இணைய ஊடகத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மற்றும் பத்திரிகையாளர் கரண் தாப்பர் ஆகியோருக்கு எதிராக அஸ்ஸாம் மாநிலம் மோரிகானில் கடந்த ஜூலை 11 அன்று பிரிவு 152 உள்ளிட்ட பல்வேறு பி.என்.எஸ். பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து `தி வயர்’ இணைய ஊடகத்தில் கடந்த ஜூன் 29 அன்று வெளியான கட்டுரைக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு மற்றும் பி.என்.எஸ். பிரிவு 152 ஆகியவற்றை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 12, 2025 அன்று - `தி வயர்’ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சித்தார்த் வரதராஜன் உள்ளிட்ட `தி வயர்’ பத்திரிகையாளர்கள் மீது அஸ்ஸாம் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தடை விதித்தது.
மேலும், பி.என்.எஸ். பிரிவு 152 குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. பி.என்.எஸ். பிரிவு 152 தேசத் துரோகம் குறித்து விவரிக்கிறது. முன்பு அமலில் இருந்த இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124ஏ தேசத் துரோகம் தொடர்புடைய குற்றங்களுக்கு தண்டனை வழங்க வழிவகை செய்கிறது.
இந்த 124ஏ பிரிவிற்கு கடந்த 2022-ல் உச்ச நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்தது. அதன்பிறகு இந்திய தண்டனை சட்டத்திற்கு மாற்றாக பி.என்.எஸ். சட்டம் அமல்படுத்தப்பட்டபோது அதன் பிரிவு 152, தேசத் துரோகம் தொடர்புடைய குற்றங்களுக்கு 7 வருடங்கள் தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க வழிவகை செய்கிறது.
இதைத் தொடர்ந்து, சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பருக்கு எதிராகப் பதியப்பட்ட புதிய வழக்கில் இருவரும் ஆஜராக வேண்டும் என்று அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள குற்றப்பிரிவு தற்போது சம்மன் வழங்கியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 22-ல் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது, அவர்கள் ஆஜராகத் தவறும் பட்சத்தில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் எஃப்.ஐ.ஆர். பதியப்பட்ட தேதி, அதன் விவரங்களில் குறித்து எந்த தகவலும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து தன் எக்ஸ் கணக்கில் இன்று (ஆக. 20) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பருக்கு ஆகியோருக்கு சம்மன் அனுப்பிய அஸ்ஸாம் காவல்துறையின் நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சில நாள்களுக்கு முன்பு இது தொடர்புடைய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கிய போதிலும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆரின் நகல் மற்றும் வழக்கு விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை, கைது அச்சுறுத்தல் மட்டுமே உள்ளது. சுதந்திரமான பத்திரிகையை நசுக்குவதற்காக ரத்து செய்யப்பட்ட தேசத்துரோகச் சட்டத்திற்கு மாற்றாக பி.என்.எஸ். (BNS) பிரிவு 152 தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
கேள்விகள் கேட்பது தேசத்துரோகமாகக் கருதப்பட்டால் ஒரு ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது’ என்றார்.