
கடந்த 2024-ல் நிலவிய கடுமையான கோடை காலத்திற்கு நேரெதிராக, 2025-ல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டில் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நடப்பாண்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அது நிறைவடைந்துள்ளது.
தட்பவெப்பம் தொடர்பான பதிவுகளை மனிதர்கள் குறித்து வைத்திருக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து, கடந்த 2024-ம் ஆண்டே மிகவும் வெப்பமயமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது.
கடந்தாண்டு மே மாதத்தில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பும், பரவலாக வெப்ப அலைகளின் தாக்கமும் ஏற்பட்டிருந்தாலும், நடப்பாண்டு கோடைக்காலத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. நாட்டின் காலநிலையில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரும் மாற்றத்தை இது குறிக்கிறது.
நடப்பாண்டில் மே மாதம் தொடங்கியவுடன், உச்சகட்ட கோடைகால வெப்பத்திற்குப் பதிலாக, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் ஏற்பட்ட பருவகாலமற்ற மழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் ஒப்பீட்டளவில் குளிரான வெப்பநிலை நிலவியது. இத்தகைய மாற்றத்திற்கு, பல்வேறு காரணங்களை வானியல் நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.
பருவமழை இயக்கவியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வழக்கத்திற்கு மாறாக ஈரப்பதத்தின் விரைவான வருகை மற்றும் மாறுபட்ட காற்று முறைகள் போன்றவை வெப்பநிலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றின. இவற்றுடன் கூடுதலாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்த மேகமூட்டமும், சில பகுதிகளில் அவ்வப்போது பெய்த மழைப்பொழிவும் வெப்பநிலையை மேலும் மிதப்படுத்தின.
எனினும், இந்த ஆரம்பகால குளிர்ச்சி கலவையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம், ஆண்டுதோறும் சவாலாக மாறியுள்ள கடுமையான வெப்பத்திலிருந்து பொதுமக்களுக்கு இது நிவாரணம் அளித்துள்ளது. குறிப்பாக வெப்பம் தொடர்பான நோய்களைக் குறைத்து, குளிர்விப்பதற்கான மின்சாரத் தேவை மீதான அழுத்தத்தை இது பெருமளவு குறைத்துள்ளது.
மறுபுறம், இந்த மாற்றம் விவசாய சாகுபடிக்கான திட்டமிடலை சீர்குலைத்துள்ளது. ஏனென்றால் உரிய வளர்ச்சிக்கு அதிக வெப்பநிலை தேவைப்படும் சில பயிர்கள் இந்த மாற்றத்தால் சவால்களை எதிர்கொள்கின்றன.
இதனால் விதைப்பு மற்றும் அறுவடைக்கான அட்டவணைகளை இந்த மாற்றத்திற்கு ஏற்றவாறு திட்டமிடும் வகையில் விவசாயிகளும், விவசாயத்திற்காக திட்டமிடுபவர்களும் இத்தகைய மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், இத்தகைய திடீர் மாற்றங்கள், இந்திய துணை கண்டத்தில் அதிகரித்து வரும் காலநிலை மாறுபாடு மற்றும் வானிலை முறைகளின் கணிக்க முடியாத தன்மையை சுட்டிக்காட்டுவதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.