திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுக்க பூதாகரமானதையடுத்து, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருமலை திருப்பதி கோயிலில் பிரசாத லட்டுவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக வெளியான ஆய்வு முடிவில் லட்டுவைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் நாடு முழுக்கப் பெரும் சர்ச்சையானது. கோயில் புனிதத்தைக் காக்க கோயில் வளாகத்தில் இன்று மஹாஷாந்தி யாகம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
"திருப்பதி திருமலை கோயில் பிரசாதத்தில் விலங்குகளின் இறைச்சி மற்றும் பிற அழுகிய பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று பொதுநல மனுவைத் தாக்கல் செய்தேன்" என்று எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஒய்வி சுப்பா ரெட்டியும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என இவர் வலியுறுத்தியுள்ளார்.