நம் பள்ளிக் காலத்துடன் நெருங்கிய பிணைப்பு கொண்ட கேம்லின் நிறுவனத்தின் தலைவரான சுபாஷ் தண்டேகர் 86 வயதில் சமீபத்தில் காலமாகியுள்ளார்.
ஸ்டேஷனரி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது கேம்லின். பள்ளி வயதில் நம் பைகளில் கட்டாயமாக இடம்பிடித்த ஒரு பொருள் - கேம்லின் ஜாமென்ட்ரி பாக்ஸ். அதன் தரத்துக்காகவும் நீடித்த உழைப்பாகவும் அனைவருடைய ஒரே தேர்வாகவும் அது இருந்தது.
1931-ல் சுபாஷ் தண்டேகரின் தந்தையான திகம்பர் தண்டேகர், இங்க் பாட்டில்களைத் தயாரிக்கும் கேம்லின் நிறுவனத்தைத் தொடங்கினார். 1958-ல் படிப்பை முடித்துவிட்டு தந்தையின் நிறுவனத்தில் தொழில்நுட்ப இயக்குநராக இணைந்தார் சுபாஷ்.
பெயிண்டிங் செய்வதற்கு ஏற்ற பொருள்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்தார். பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற ஸ்டேஷ்னரி பொருள்களையும் முழுவீச்சில் தயாரித்தார். இதில் கேம்லின் ஜாமென்ட்ரி பாக்ஸும் கேம்லின் இங்க்கும் மாணவர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிறுவனம் 1960-களில் சுபாஷ் தண்டேகரின் தலைமையில் ஸ்டேஷனரி பொருட்களுடன் சேர்த்து பலவகையான கலை பொருட்களையும் அறிமுகப்படுத்தியது. அன்று தொடங்கி இன்று வரை பள்ளி மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய கேம்லின் ஜாமென்ட்ரி பாக்ஸை வடிவமைத்ததில் சுபாஷ் தண்டேகருக்கு முக்கியப் பங்கு உள்ளது.
பள்ளிகள், நிறுவனங்கள், கலைக்கூடங்கள் போன்றவற்றின் பல தேவைகளை கேம்லின் நிறுவனம் பூர்த்தி செய்தது. 2011-ல் ஜப்பான் நிறுவனமான கோகுயோ நிறுவனம் கேம்லினின் அதிகளவுப் பங்குகளை வாங்கியது. இதைத் தொடர்ந்து கோகுயோ கேம்லினின் தலைவராகவும் சுபாஷ் தண்டேகர் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபாஷ் தண்டேகர் நேற்று காலமானார்.
இந்தியாவின் தொழில் வளர்சிக்கு சுபாஷின் பங்களிப்பு மிக முக்கியமானது எனப் பலரும் அவருடைய சேவையைப் பாராட்டி வருகிறார்கள். இவரின் மறைவுக்கு மஹாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுபாஷ் தண்டேகரின் மறைவையொட்டி சமூகவலைத்தளங்களில் பலரும் கேம்லின் தொடர்புடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.