5,8-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்தியக் கல்வித் துறைச் செயலர் சஞ்சய் குமார் கூறியதாவது:
"5 மற்றும் 8-ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள். தோல்வியடைந்த மாணவர்களுக்கு அடுத்த இரு மாதங்களில் மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தோல்வியடைந்தால், அவர்கள் அடுத்த வகுப்புக்கு அனுப்பப்பட மாட்டார்கள். 8-ம் வகுப்பு வரை எந்தவொரு மாணவரும் பள்ளியிலிருந்து நீக்கப்படக் கூடாது" என்றார் அவர்.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கல்வித் துறையின் மூத்த அதிகாரிகளின் தெரிவித்ததாக ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்தியின் படி, "கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உள்பட மத்திய அரசு நிர்வகிக்கும் 3,000 பள்ளிகளுக்கு மத்திய அரசின் இந்த அறிவிக்கை பொருந்தும் எனக் கூறியுள்ளார்கள். பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலில் இருப்பதால், இதுதொடர்பாக மாநிலங்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.