
இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் தற்போது ஒரு கல்வி ஆண்டின் ஜூலை/ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்திய பல்கலைக்கழகங்கள் இந்தக் கல்வியாண்டு முதல் ஜூலை/ஆகஸ்ட் மட்டுமல்லாமல் ஜனவரி/பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என யு.ஜி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய அறிவிப்பால் மாணவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். உடல்நிலைக் கோளாறு, குடும்பச் சூழ்நிலை போன்ற காரணங்களால் ஜூலை/ஆகஸ்ட் மாதங்களில் கல்லூரிச் சேர்க்கையைத் தவறவிடும் மாணவர்கள் இனி ஒரு வருடம் காத்திருக்காமல், ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் கல்லூரியில் இணைந்து கொள்ளலாம்.
இந்தியாவில் திறந்தநிலை மற்றும் தொலைதூரக்கல்வி முறையில் ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
`யு.ஜி.சி.யின் இந்த அறிவிப்பு மூலம் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளது’ என யு.ஜி.சி தலைவர் ஜகதீஷ் குமார் பேட்டியளித்துள்ளார். இது குறித்து மேலும் தகவல் தெரிவித்த குமார், `வருடத்துக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கொடுத்திருந்தாலும், இந்த விஷயத்தில் பல்கலைகழகங்கள் தங்கள் ஆட்சிமன்றக் குழுவைக் கூட்டி இறுதி முடிவெடுத்துக் கொள்ளலாம்’ என்றார்.
அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் வருடத்துக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடைபெறும் திட்டம் அமலில் உள்ளது.