
நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்ற மாணவியால் பொதுத் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் போனது நாடு முழுக்க கவனத்தை ஈர்த்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தோல்வியடைந்தார். மார்ச் மாதம் நடைபெற்ற இந்தத் தேர்வில் இயற்பியலில் 21 மதிப்பெண்களும், வேதியியலில் 33 மதிப்பெண்களும் பெற்றார்.
மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூனில் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை எழுதிய அந்த மாணவி, வேதியியல் பாடத்தில் தேர்ச்சிக்குத் தேவையான 33 மதிப்பெண்களை சரியாகப் பெற்று தேர்ச்சியடைந்தார். ஆனால், இயற்பியல் பாடத்தில் மீண்டும் தோல்வியடைந்துள்ளார். இந்த முறை 22 மதிப்பெண்களை மட்டுமே இவரால் பெற முடிந்தது.
துணைத் தேர்விலும் தேர்ச்சி பெற முடியாத மாணவியால் எப்படி நீட் தேர்வில் மட்டும் 705 மதிப்பெண்களைப் பெற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுக்க நீட் தேர்வுக்கு எதிராக விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில், குளறுபடிகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது, நீட் தேர்வு மீதான விமர்சனத்தை மேலும் வலுப்பெற வைத்துள்ளது.
நீட் தேர்வில் உயர் மதிப்பெண்களைப் பெற்ற இந்த மாணவிக்கு முன்னணி மருத்துவக் கல்லூரியில் இலவசமாக இடம் கிடைக்கும். ஆனால், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாததால், இவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.