இந்தியப் பங்குச் சந்தை ஜூன் 4-ல் சாதனை படைக்கும்: பிரதமர் மோடி

"இதற்கு முன்பு இதைவிட மோசமான சரிவையெல்லாம் பங்குச் சந்தை கண்டுள்ளது." - அமித் ஷா.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜூன் 4-ல் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் இந்தியப் பங்குச் சந்தை புதிய சாதனையைப் படைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முந்தைய நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில் குறைவான அளவில் வாக்குகள் பதிவானதால், பாஜக எதிர்பார்த்த இடங்களைக் காட்டிலும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறலாம் என்று முதலீட்டாளர்களால் கணிக்கப்பட்டன. இதனால், பங்குச் சந்தை சரிவைக் கண்டன.

என்டிடிவி பிராஃபிட்டுக்கு அளித்த நேர்காணலில் பங்குச் சந்தை குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:

"எனது தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரும்போது பங்குச் சந்தை 25 ஆயிரம் புள்ளிகளில் இருந்தது. தற்போது 75 ஆயிரம் புள்ளிகளில் உள்ளது.

ஜூன் 4-ல் முந்தைய சாதனைகள் அனைத்தையும் பங்குச் சந்தை முறியடிக்கும். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், அந்த வாரம் முழுக்க பங்குச் சந்தையில் பணிபுரிபவர்கள் சோர்வடையும் அளவுக்கு அதன் செயல்பாடு இருக்கும்.

பங்குச் சந்தையில் சாதாரண மக்கள் முதலீடு செய்யும் அளவு அதிகரித்தால், அது பொருளாதாரத்துக்கு நல்லது. துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கான பசியுணர்வு ஒவ்வொரு குடிமக்களிடமும் அதிகரிக்க வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.

மத்திய உள்துறை அமித் ஷாவும் பங்குச் சந்தையின் சரிவு குறித்து விளக்கமளித்துள்ளார். என்டிடிவிக்கு முன்பு அளித்த பேட்டியில் அமித் ஷா கூறுகையில், "இதற்கு முன்பு இதைவிட மோசமான சரிவையெல்லாம் பங்குச் சந்தை கண்டுள்ளது. இதைத் தேர்தலுடன் பொருத்திப் பார்க்கக் கூடாது. எனினும், வதந்திகள் பரவியுள்ளன. ஜூன் 4-க்கு பிறகு பங்குச் சந்தை ஏற்றம் அடையும் என்பதால், முன்கூட்டியே பங்குகளை வாங்கிவிடுங்கள்" என்றார் அமித் ஷா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in