
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் பர்வதனேனி ஹரிஷ் பாகிஸ்தானை கடுமையாக சாடினார்.
அமைதி மற்றும் பன்முகத்தன்மை குறித்து நேற்று (ஜூலை 22) நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய ஹரிஷ், சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து தொடர்ச்சியாக கடன் வாங்கும் நாடு என்றும், வெறித்தனம் மற்றும் பயங்கரவாதத்தில் மூழ்கிய நாடு என்றும் பாகிஸ்தான் மீது முத்திரை குத்தினார்.
`முன்னேற்றம், செழிப்பு மற்றும் வளர்ச்சி மாதிரிகளின் அடிப்படையில் இந்திய துணைக் கண்டம் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது’ என்று கூறி, பாகிஸ்தான் பிரதிநிதி முன்பு கூறிய கருத்துக்களுக்கு ஹரிஷ் பதிலளித்தார்.
`ஒருபுறம், முதிர்ச்சியடைந்த ஜனநாயகம், வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் பன்முகத்தன்மை உடைய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைக்கொண்ட இந்தியா உள்ளது. மறுபுறம், வெறித்தனம் மற்றும் பயங்கரவாதத்தில் மூழ்கி, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து தொடர்ச்சியாகக் கடன் வாங்கும் பாகிஸ்தான் உள்ளது’ என்றார்.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டு, பயங்கரவாதத் தாக்குதல்களில் பொறுப்பு ஏற்க வேண்டியதன் அவசியம் குறித்து ஹரிஷ் அடிக்கோடிட்டுப் பேசினார்.
`எல்லைதாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டுவதன் மூலம், சர்வதேச உறவுகளின் உணர்வை மீறும் நாடுகள் கடுமையான விலை கொடுக்கவேண்டும்’ என்று அவர் கூறினார்.
மேலும், `பஹல்காமில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக... ஏப்ரல் 25 அன்று கவுன்சில் அறிக்கையின் அடிப்படையில்... பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது.
முதன்மை நோக்கங்களை அடைந்ததால், பாகிஸ்தானின் வேண்டுகோளின்பேரில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டது’ என்றார்.