
2005 முதல் சுரங்க குத்தகைதாரர்களிடம் இருந்து மத்திய அரசு வசூலித்த ராயல்டி தொகையை மாநில அரசுகள் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 14) அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 25-ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, `கனிம வளங்கள் மீது ராயல்டி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறது. ராயல்டியை, வரி என்று கருத முடியாது’ என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் கனிம வளங்கள் மீது மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்று குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம்.
இந்த தீர்ப்பின் தொடர்ச்சியாக, `ஏப்ரல் 1, 2005 முதல் சுரங்க குத்தகைதாரர்களிடம் இருந்து மத்திய அரசு வசூலித்த ராயல்டி தொகையை மாநில அரசுகள் தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம்’ என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் `ஏப்ரல் 1, 2005-க்கு முன்பு மத்திய அரசு வசூலித்த ராயல்டி தொகைகளுக்கு மாநில அரசுகள் உரிமை கோரக்கூடாது’ என்று தெளிவுபடுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.
`கடந்த 19 வருடங்களாக மத்திய அரசு வசூலித்த ராயல்டி தொகையை ஏப்ரல் 1, 2026 தொடங்கி அடுத்த 12 வருடங்களுக்கு தவணை முறையில் மாநில அரசுகள் பெற்றுக்கொள்ளலாம்’ என்றும் அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் கனிம வளங்கள் நிறைந்த மாநிலங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து அதிக தொகை கிடைக்கவுள்ளது.
1989-ல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்தியா சிமெண்ட்ஸ் வழக்கில், `1952 சுரங்கங்கள் சட்டத்தின் கீழ் ராயல்டி என்பது வரி. எனவே சுரங்கங்கள் மீது ராயல்டியை விதிக்க மாநில சட்டப்பேரவைகளுக்கு உரிமை கிடையாது’ என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பை ஜூலை 25-ல் ரத்து செய்தது சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு.