
கனிம வளங்கள் மீது ராயல்டி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறது என்று தீர்ப்பளித்துள்ளது தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு.
கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசின் சுரங்க நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இன்று காலை (ஜூலை 25) வழங்கப்பட்ட தீர்ப்பில், `ராயல்டி என்பது வரி கிடையாது. இந்தியா சிமெண்ட்ஸ் வழக்கில் ராயல்டி என்பது வரி என்று வழங்கப்பட்ட தீர்ப்பு தவறானது. அரசுக்குச் செலுத்தப்படும் கட்டணங்களை வரி என்று கருத முடியாது. கனிம வளங்கள் மீதான வரி விதிப்பை செயல்படுத்த மாநில சட்டப்பேரவைகளுக்கு உரிமை உள்ளது.
மேலும் கனிம வளங்கள் மீதான வரி விதிப்பை செயல்படுத்த நாடாளுமன்றத்துக்கு உரிமை இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 246-ல் உள்ள 2-ம் பட்டியலில் இருக்கும் `கனிம வளங்களைக் கொண்ட நிலங்கள் மீதான வரி’ என்ற பொருள் மீது மாநில சட்டப்பேரவைகளுக்கு முழு உரிமை உள்ளது’ என்று தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
1989-ல் நடந்த இந்தியா சிமெண்ட்ஸ் வழக்கில், `1952 சுரங்கங்கள் சட்டத்தின் கீழ் ராயல்டி என்பது வரி. அத்தகைய ராயல்டியை விதிக்க மாநில சட்டப்பேரவைகளுக்கு உரிமை கிடையாது’ என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இந்தப் புதிய தீர்ப்பின் மூலம் 1989 உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார் நீதிபதி நாகரத்னா. அவரது தீர்ப்பில், `ராயல்டி என்பது வரியைச் சேர்ந்தது. கனிம வளங்கள் மீது ராயல்டி அல்லது வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை. 1989 தீர்ப்பு சரியானது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.