
ஹிமாச்சல பிரதேச முதல்வருக்காக வாங்கி வரப்பட்ட சமோசாக்கள் மாயமானதால், அது தொடர்பாக மாநில அரசு சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த அக்.21-ல் ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு அம்மாநில காவல்துறை தலைமையகத்துக்குச் சென்றார். அப்போது முதல்வருக்கு வழங்கும் வகையில் சமோசா வாங்கி வர உத்தரவிடப்பட்டது. ஆனால் அவ்வாறு வாங்கி வரப்பட்ட சமோசாக்கள் முதல்வருக்கு வழங்கப்படவில்லை. எனவே அது குறித்து துறைரீதியிலான உள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
முதல்வருக்காக ஹோட்டல் ரேடிசன் புளூவிலிருந்து சமோசாக்களை வாங்கி வந்த உதவி ஆய்வாளர் ஒருவர், அவற்றை உயர் அதிகாரிகளுக்கு சிற்றுண்டிகளை விநியோகம் செய்யும் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் பிரிவு ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் அவை முதல்வருக்கு வழங்கப்படாமல், அங்கிருந்த காவலர்களுக்கு வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.
அரசின் நலத்திட்டங்கள் குறித்து காங்கிரஸ் அரசு கவலைப்படுவதில்லை. ஆனால் காணாமல்போன சமோசாக்களுக்காக சிஐடி விசாரணை நடத்தப்படுகிறது என இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ளது பாஜக. மேலும் சமோசா அணிவகுப்பு என்ற பெயரில் இன்று தலைநகர் சிம்லாவில் பாஜக இளைஞர் அணியினர் அணிவகுப்பு ஒன்றை நடத்தினர்.
இது குறித்துப் பேசியுள்ள ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு, `அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை. தவறான நடத்தைக்காக சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் சமோசாக்களைப் பற்றி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன’ என்றார்.