
துணைவேந்தர் தேடுதல் குழுவில் மாநில ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய விதிகள் குறித்த வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை சம்மந்தப்பட்ட மாநில ஆளுநர் (வேந்தர்) அமைப்பார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 3 பேர் கொண்ட இந்த தேடுதல் குழுவிற்கு யுஜிசி, ஆளுநர், பல்கலைக்கழக நிர்வாகக் குழு தலா ஒரு உறுப்பினரை நியமிக்கும் எனவும் வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் துணைவேந்தர் தேடுதல் குழுக்களில் இனி மாநில அரசின் உறுப்பினர் இடம்பெற முடியாது.
அத்துடன் தொழில்துறை வல்லுனர்கள், பொது நிர்வாகம், பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த வல்லுனர்கள் விரைவில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுவார்கள் எனவும் யுஜிசியின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில், மாநில ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், யுஜிசி வெளியிட்டுள்ள இந்த வரைவு விதிகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து தன் எக்ஸ் சமூக வலைதளக் கண்க்கில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`மத்திய பாஜக அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கை, அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்கும் வகையிலும், ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மட்டுப்படுத்தும் வகையிலும் உள்ளது, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் வசம் கல்வி இருக்க வேண்டுமே தவிர, மத்திய பாஜக அரசின் கண் அசைவில் இயங்கும் ஆளுநர்களிடம் அல்ல.
நாட்டிலேயே அதிகமான முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கும் தமிழ்நாடு இதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பட்டியலில் கல்வி உள்ளது. எனவே யுஜிசியின் இந்த ஒரு தலைப்பட்சமான அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
இந்த அதிகார துஷ்பிரயோகத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. இதை எதிர்த்துச் சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் தமிழ்நாடு போராடும்’ என்றார்.