தில்லி ஏஐ மாநாட்டில் டிரம்பின் ஆலோசகர் பேசிய கருத்தால் சர்ச்சை | Sriram Krishnan |

இந்தியா உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்புகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது....
தில்லி ஏஐ மாநாட்டில் டிரம்பின் ஆலோசகர் பேசிய கருத்தால் சர்ச்சை
தில்லி ஏஐ மாநாட்டில் டிரம்பின் ஆலோசகர் பேசிய கருத்தால் சர்ச்சை
2 min read

தில்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் டிரம்பின் ஆலோசகரான ஸ்ரீராம் கிருஷ்ணன் பேசிய கருத்துகள் சர்ச்சையாகியுள்ளது.

தில்லியின் பாரத் மண்டபத்தில் கடந்த பிப்ரவரி 16 முதல் 20 வரை இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் என்ற தலைப்பிலான உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள், உலக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

டிரம்பின் ஆலோசகர் சர்ச்சைப் பேச்சு

குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செயற்கை நுண்ணறிவு ஆலோசகரான சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீராம் கிருஷ்ணனும் கலந்து கொண்டார். உச்சி மாநாட்டில் அவர் பேசிய கருத்து சமூக ஊடகங்களில் சர்ச்சை ஆகியுள்ளது. அவர் கூறியதாவது: “உலகம் அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் தொகுப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்தி, உலக நாடுகள் தங்கள் செயலிகளை உருவாக்க வேண்டும். அதற்குத் தகுந்த அளவில் எங்கள் தொழில்நுட்பம் அசாத்தியமாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இந்தியாவின் ஏஐ வளர்ச்சி?

இந்தியாவில் தற்சார்பு செயற்கை நுண்ணறிவு என்பதைக் குறித்து நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, அமெரிக்க ஏற்கெனவே தனது சொந்த செயற்கை நுண்ணறிவு முதலீடுகளில் 600 பில்லிடன் டாலர்களைச் செலவழித்துள்ளது. மேலும், உலகம் முழுவதிலும் தனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு தேவையான பயிற்சிகளைக் கொடுத்து, தரவு மையங்களை அமைக்கவுள்ளது. அதற்கான ஆதரவு நாடுகளைப் பற்றிச் சிந்திக்கும்போது, இந்தியா அமெரிக்காவின் முக்கியமான ஆதரவு நாடாக இருக்கிறது. இந்தியா உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்புகளை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. இதற்கு இந்திய நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று பேசினார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் பேச்சுக்குக் கண்டனம்

அவரது இந்தப் பேச்சுக்குச் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஸ்ரீராம் கிருஷ்ணன், அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பேசியதாகவும், இந்திய நிறுவனங்கள் உலகளாவிய போட்டிக்கு இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்பது போன்ற தொனியில் கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சியைச் சிறுமைப்படுத்தும் செயலாக உள்ளதாக இந்தியத் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?

சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், ஒரு தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் முதலீட்டாளர். மென்பொருள் துறையில் நிபுணத்துவம் பெற்ற இவர், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் (மெட்டா) மற்றும் ட்விட்டர் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவர். குறிப்பாக, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியபோது, அதன் மாற்றியமைக்கும் குழுவில் ஸ்ரீராம் கிருஷ்ணன் முக்கியப் பங்காற்றினார். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் முக்கியக் குழுவில் அவர் இடம்பெற்றுள்ளார். அதனடிப்படையில் இந்தியா வந்து உரையாற்றிய அவரது பேச்சு சர்ச்சை ஆகியுள்ளது. ஆனால், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு, ஸ்ரீராம் கிருஷ்ணன் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

Summary

Trump's advisor Sriram Krishnan's comments at the Artificial Intelligence Conference in Delhi have sparked controversy.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in