
அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுக்கு தில்லி குடியரசு தலைவர் மாளிகையில் இன்று (டிச.16) காலை சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பரில் இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக்க. அதிபராகப் பதவியேற்றதற்குப் பிறகு, முதல்முறையாக நேற்று இந்தியா வந்தடைந்தார் திசாநாயக்க. தலைநகர் தில்லியில் மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் எல். முருகன் திசாநாயக்கவை வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை தில்லி குடியரசு தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் திசாநாயக்கவை வரவேற்றனர். அதன் பிறகு திசாநாயக்கவுக்கு சிவப்புக் கம்பள அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனை அடுத்து இருதரப்பு அமைச்சர்களும், அதிகாரிகளும், தூதர்களும் பரஸ்பரம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
நேற்று தில்லிக்கு வந்தபிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்துப் பேசினார் அதிபர் திசாநாயக்க.
இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்ட திசாநாயக்க, `இந்திய-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, முதலீடுகளுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பது, பிரந்தியத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவை குறித்து எங்கள் பேச்சுவார்த்தை அமைந்திருந்தது’ என்றார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவின் `சாகர் கொள்கையில்’ இலங்கைக்கு உள்ள முக்கியத்துவம் குறித்து திசாநாயக்கவிடம் எடுத்துரைத்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.