
பிஹார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாவட்ட எஸ்.பி. அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மற்றொ சம்பவத்தில் சரண் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். சப்ரா எஸ்.பி. ஆஷிஷ் கூறுகையில்,சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "அக்டோபர் 15 அன்று சாராயம் அருந்தியிருக்கிறார். நேற்று மலை முதல் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. இதன்பிறகு, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தோம்" என்றார்.
பிஹாரில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விஷச் சாராயம் இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்றும் நிதிஷ் குமார் அரசு மீது எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் விமர்சனம் வைத்துள்ளது. "ஒவ்வொரு முறையும் ஹோலி, தீபாவளி பண்டிகையின்போது விஷச் சாராயம் அருந்தி மக்கள் உயிரிழப்பதைப் பார்க்க முடிகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் இதற்கு நேரடி பொறுப்பு. மது விற்பனைக் கும்பலுக்கு அரசின் பாதுகாப்பு உள்ளது" என்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் விமர்சனம் வைத்துள்ளது.
இருவேறு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.