

நாட்டில் இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் அறிவித்தார்.
பிஹார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வரும் நவம்பர் 4 முதல் நடத்தப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் அறிவித்தார். தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
“பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வெற்றிகரமாக நடந்தது. அதில் 7.5 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் என்பது 1951 முதல் 2004 வரை 8 முறை நடத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் பெயர்கள் இருமுறை பதிவாகுவது, முகவரியில் மாற்றம், இடமாற்றம், இறப்பு உள்ளிட்ட காரணங்களால் வாக்காளர் பட்டியலில் ஏற்படும் மாற்றங்களை சீராக்கும் நடவடிக்கையாக சிறப்பு தீவிர திருத்தம் நிகழ்த்தப்படுகிறது.
அதன்படி இரண்டாம் கட்டமாக அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன.
இந்த 12 மாநிலங்களிலும் உள்ள வாக்காளர் பட்டியல் இன்று இரவு 12 மணியுடன் இறுதி செய்யப்படும். அதன்பின் பூத் அதிகாரி மூலம் வாக்காளர்களுக்குச் சிறப்பு கனக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டு, தற்போது உள்ள வாக்காளர் பட்டியல் கடந்த 2003-ன் வாக்காளர் பட்டியலுடன் சரி பார்க்கப்படும். அதில் பெயர் இடம்பெற்றுள்ளவர்களும், பெற்றோர் பெயர்கள் இடம்பெற்றுள்ள புதிய வாக்காளர்களும் எந்தவித கூடுதல் அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. முந்தைய பட்டியலில் பெயர் இல்லாதவர்களின் பெயர்கள், புதிய பட்டியலில் இடம்பெற்றிருந்தால் கூடுதல் அடையாள அட்டைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தச் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான படிவங்கள் நாளை (அக்.28) முதல் நவம்பர் 2025 வரை அச்சடிக்கப்படும். மேலும் கணக்கெடுப்புக்கு உரிய பயிற்சிகள் பூத் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும். அதன்பின் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு நடத்தப்படும். அதனடிப்படையில் முதற்கட்ட வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9-ல் வெளியிடப்படும். அன்று முதல் ஜனவரி 31 வரை திருத்தங்கள் பெறப்பட்டு சரி செய்யப்படும். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 7 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்” என்றார்.
The Chief Election Commissioner Gyanesh Kumar has announced that in the second phase across the country, special intensive revision works for the voter list will be conducted in 12 states and Union Territories, including Tamil Nadu.