
மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், ஆந்திரா, பீஹார் மாநிலங்களுக்கு பல முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் வாசித்த உரையின் ஒரு பகுதி பின்வருமாறு:
ஆந்திரப் பிரதேசத்தின் மூலதனத் தேவையை உணர்ந்து, பல்வேறு அமைப்புகள் மூலம் சிறப்பு நிதியுதவியை வழங்கவுள்ளோம். நடப்பு நிதியாண்டில் ரூ. 15 ஆயிரம் கோடி வழங்கப்படும். வரும் ஆண்டுகளில் கூடுதல் நிதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்களுடைய அரசு முயற்சிகளைச் செய்துள்ளது. பொலாவரம் நீர்பாசன திட்டத்துக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
பிஹார் மாநிலத்தில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கடன் உதவிக்கு ஏற்பாடு செய்து தரப்படும். ரூ.26,000 கோடி செலவில் 4 புதிய எக்ஸ்பிரஸ்வே சாலைகள் பீஹாரில் அமைக்கப்படும்.
பீஹாரில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும். கயாவில் உள்ள விஷ்ணு பாத் கோயில் மற்றும் புத்த கயாவில் உள்ள மகா போதி கோயில்களுக்கான வழித்தடங்கள் மேம்படுத்தப்படும்.
பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேச மாநிலங்களை பல வழிகளிலும் மேம்படுத்த பூர்வோதையா திட்டம் செயல்படுத்தப்படும்.