படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
பெங்களூருவிலுள்ள பாரத் இயர்த் மூவர்ஸ் லிமிடட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த ரயிலை அவர் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்டுள்ள இந்த வந்தே பாரத் ரயிலில் பல்வேறு உயர்ரக அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 16 பெட்டிகளில் 11 பெட்டிகள் ஏசி மூன்றாம் வகுப்பு. இதில் 611 பேர் பயணிக்க முடியும்.
4 பெட்டிகள் ஏசி இரண்டாம் வகுப்பு. இதில் 188 பேர் பயணிக்க முடியும். ஒரு ஏசி முதல் வகுப்பு பெட்டி உள்ளது. இதில் 24 பேர் பயணிக்க முடியும். இந்த ரயில் சராசரியாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது.
ரயிலின் சிறப்பம்சங்கள்
யுஎஸ்பி சார்ஜர் வசதி, பொது அறிவிப்புக்கான அம்சங்கள், காட்சித் தகவல் அமைப்புகள், டிஸ்ப்ளே பேனல்கள், வாசிப்பதற்கான மின் விளக்கு, பாதுகாப்பு கேமராக்கள், மாற்றுத் திறனாளி பயணிகளுக்குப் பிரத்யேகப் படுக்கை வசதிகள், கழிப்பறைகள் எனப் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஏசி முதல் வகுப்பில் ஷவருடன் கூடிய குளியலறை அமைக்கப்பட்டுள்ளது. சுடு தண்ணீர் வசதியும் உள்ளது.
பயணிகளுக்கு மட்டுமின்றி, பணியாளர்களும் வசதியாக இருக்கும் வகையில், அவர்களுடைய ஓய்வுக்காகப் பிரத்யேக வசதிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் கூறியதாவது:
"நடுத்தர வர்க்க மக்கள் மிகுந்த வசதியுடன் ரயிலில் பயணிக்க வேண்டும் என்பது இந்திய ரயில்வேயின் இலக்கு. அனைவருடைய வசதிக்கும் ஏற்ப டிக்கெட் விலையும் மலிவாக இருக்கும்.
பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதால், ரயிலில் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. கவச் தொழில்நுட்பமும் இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த ரயில்களுக்கு இணையாகப் புதிய படுக்கை வசதிகள் கொண்ட இந்த ரயிலில் இருக்கும்" என்றார்.