முடா வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து 3 மாதங்களில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைசூருல், அரசாங்க வளர்ச்சிப் பணிகளால் நிலங்களை இழந்த பொதுமக்களுக்கு மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (முடா) மாற்று இடங்களில் நிலங்களை ஒதுக்குகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியும் இதனால் நிலங்களை இழந்துள்ளார்.
மாற்று இடங்களில் நிலங்களை ஒதுக்குவதில் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குக் கூடுதல் மதிப்புடைய நிலங்கள் ஒதுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சமூக ஆர்வலர் சினேஹமாயி கிருஷ்ணா, மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை நாடினார். இதை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து மூன்று மாதங்களில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. லோக் ஆயுக்தாவின் மைசூரு காவல் துறை முடா வழக்கு குறித்து விசாரணை நடத்தவுள்ளது.
முன்னதாக, சினேஹமாயி கிருஷ்ணா மேலும் இரு சமூக ஆர்வலர்களுடன் முதல்வர் சித்தராமையா மீது கர்நாடக ஆளுநரிடம் புகாரளித்தார். முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டார். ஆளுநரின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்குத் தொடர்ந்தார். இவரது மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.