
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 வருடங்கள் நிறைவு பெற்றதை ஒட்டி தபால்தலை மற்றும் சிறப்பு நாணயத்தை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
கடந்த 1946-ல் பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெறவிருந்த இந்திய நாட்டிற்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது இந்திய அரசியல் நிர்ணய சபை. 12 டிசம்பர் 1946-ல் முதல்முறையாக இந்த அரசியல் நிர்ணய சபை கூடியது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 299 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபை 2 வருடங்கள், 11 மாதங்கள், 17 நாட்கள் கூடி சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.
இதைத் தொடர்ந்து, கடந்த 26 நவம்பர் 1949-ல் அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் உருவாக்கத்தில் அரசியலமைப்பு வரைவுக் குழுத் தலைவரும் அன்றைய மத்திய சட்ட அமைச்சருமான பி.ஆர். அம்பேத்கர் முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டு 75 வருடங்கள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டுக்கூட்டம் இன்று (நவ.26) நாடாளுமன்ற மைய கட்டடத்தில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 வருடங்கள் நிறைவுபெற்றதைக் சிறப்பிக்கும் வகையில் தபால்தலை மற்றும் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது. அத்துடன், சமஸ்கிருதம் மற்றும் மைதிலி மொழிகளில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த நிகழ்வில், அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்தார் திரௌபதி முர்மு. துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.