சத்தீஸ்கரில் அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து நக்ஸல்களுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிவருவதாகவும், விரைவில் நக்ஸல்கள் துடைத்தெரியப்படுவார்கள் எனவும் 9 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய்.
இன்று (செப்.03) சத்தீஸ்கர் மாநிலத்தின் டான்டேவாடா-பிஜாப்பூர் மாவட்டங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 நக்ஸல்கள் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்த சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், `அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து நக்ஸல்களுக்கு எதிராகத் தீவிரமாக சண்டையிட்டு வருகிறோம். நமது வீரர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். அவர்களின் தீரத்தை நாங்கள் வணங்குகிறோம். நக்ஸல்கள் சுருங்கிக்கொண்டே வருகிறார்கள். விரைவில் அவர்கள் துடைத்தெரியப்படுவார்கள்’ என்றார்.
மேலும் இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில், `மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல்படையின் கூட்டு என்கவுண்டரில் இதுவரை 9 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் இதுவரை 13 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பாதுகாப்புப் படைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். நக்ஸலிசத்தை வேரறுக்கும் வரை எங்கள் சண்டை தொடரும்’ என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் விஷ்ணு தியோ சாய்.
`2024 மழைக்காலத்தில், அதாவது கடந்த 2-3 மாதங்களில் 35-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனர். நிறைய நக்ஸல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளால் பலர் சரணடைந்துள்ளனர்’ என்றார் பஸ்டர் ஐஜி சுந்தர்ராஜ்.