காங். நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்வு

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தியைத் தேர்வு செய்ய, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்தார்.
காங். நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்வு
ANI

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் தில்லியில் இன்று மாலை கூடியது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களைத் தேர்வு செய்வதற்காக இந்தக் கூட்டம் கூடியது. காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தியைத் தேர்வு செய்ய, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்தார். கௌரவ் கோகோய், தாரிக் அன்வர், கே. சுதாகரன் ஆகியோர் இதை வழிமொழிந்தார்கள்.

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி கூறுகையில், "காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்" என்றார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், "காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டது நல்லது. அவர் தொடர்ந்து எங்களை வழிநடத்துவார்" என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

கார்த்தி சிதம்பரம் பேசுகையில், "காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். வெற்றி பெற்ற அனைவரையும் அவர் வாழ்த்தினார். புதிய உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்" என்றார் அவர்.

முன்னதாக, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று காலை கூடியது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்குமாறு ராகுல் காந்தியை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in