அமலாக்கத் துறை காவலில் இருந்தபடி தில்லி முதல்வர் கெஜ்ரிவால் 2-வது உத்தரவு!

அமலாக்கத் துறை காவலில் இருந்தபடி கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் முதல் உத்தரவைப் பிறப்பித்தார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்புப்படம்)
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்புப்படம்)

தில்லி மதுபானக் கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை காவலில் உள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சுகாதாரத் துறை அமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் கூறியதாவது:

"அமலாக்கத் துறை காவலில் உள்ள போதிலும், தில்லி மக்களின் ஆரோக்கியத்தின் மீது அரவிந்த் கெஜ்ரிவால் கவலை கொண்டுள்ளார். தான் சிறையிலிருப்பதன் காரணத்தினால் மக்கள் அவதிப்படக் கூடாது என்கிற கவலை அவருக்கு உள்ளது.

தில்லியில் உள்ள சில மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்கில் இலவச மருந்துகளுக்குத் தட்டுப்பாடு உள்ளன. இதுதவிர இலவசமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் சில இடங்களில் செய்யப்படுவதில்லை . இந்தப் பிரச்னைகளை சரி செய்யுமாறு முதல்வர் தனது வழிகாட்டுதலின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

உங்களுடைய முதல்வர் சிறையிலிருந்தாலும்கூட, உங்களைப் பற்றிதான் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்" என்றார் சௌரப் பரத்வாஜ்.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். மார்ச் 22-ல் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கியது. அமலாக்கத் துறை காவலில் இருந்தபடி தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உத்தரவைப் பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in