
ஆங்கிலம் குறித்த தனது கருத்துக்களால் சர்ச்சையைக் கிளப்பிய சில நாட்களுக்குப் பிறகு, இந்திய மொழிகளைத் தழுவுவதற்கான தனது அழைப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் விடுத்தார்.
குறிப்பாக, `அடிமைத்தனத்தின் மனநிலையை அகற்ற மொழியியல் பெருமை அவசியம்’ என்ற கருத்தை வலியுறுத்தினார்.
`எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை. எந்த வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது. ஆனால் நமது சொந்த மொழி மீது பெருமை கொள்ளவும், அதில் பேசவும், சிந்திக்கவும் முயற்சி செய்யவேண்டும்’ என்று புது தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் அமித் ஷா பேசினார்.
`நாம் அடிமைத்தன மனநிலையிலிருந்து விடுபடவேண்டும். ஒருவர் தனது மொழி மீது பெருமைகொண்டு, அது குறித்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வரை, அத்தகைய (அடிமை) மனநிலையிலிருந்து நாம் விடுபட முடியாது’ என்று அவர் கூறினார்.
மொழி என்பது `ஒரு தேசத்தின் ஆன்மா’ என்று வர்ணித்த அமித் ஷா, `அனைத்து இந்திய மொழிகளையும் - குறிப்பாக அதிகாரப்பூர்வ மொழியை நாம் பாதுகாத்து வளப்படுத்த முயற்சிகள் எடுக்கவேண்டும். நமது மொழிகளை நாம் உயிருடன் வைத்திருக்கவேண்டும். இது வெறும் தொடர்பு பற்றியது மட்டுமல்ல, இது நமது தேசிய அடையாளத்தைப் பற்றியது’ என்றார்.
கடந்த வாரம் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசிய அமித் ஷா, `இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள், அத்தகைய சமூகத்தின் உருவாக்கம் வெகு தொலைவில் இல்லை. நமது மொழிகள் இல்லாமல், நாம் உண்மையான இந்தியராக இருப்பதை நிறுத்திவிடுகிறோம். நமது நாட்டை, நமது கலாச்சாரத்தை, நமது மதத்தை புரிந்துகொள்ள, எந்த வெளிநாட்டு மொழியும் போதுமானதாக இல்லை’ என்றார்.
அமித் ஷாவின் இத்தகைய கருத்துகளைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், எந்த மொழிக்கும் எதிராக இல்லை என்று தற்போது பேசியுள்ளார்.