மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 6-வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபரான லலித் ஜா தில்லியிலிருந்து தப்பிப்பதற்கு உதவியதாக மகேஷ் குமாவாத் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவரைக் கைது செய்துள்ள தில்லி காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது டிசம்பர் 13-ம் தேதி மக்களவைக்குள் இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் அரங்கேறிய பிறகு, லலித் ஜா ராஜஸ்தான் சென்றுள்ளார். அங்கு இரு தினங்கள் இருந்துள்ளார். அங்கு லலித் ஜா ஆதாரங்களை அழித்த சம்பவத்தில் மகேஷும் உடனிருந்ததாகக் கூறப்படுகிறது.
இவரும் தாமாக முன்வந்து காவல் துறையினரிடம் சரணடைந்தார். மகேஷ் மற்றும் மகேஷுடன் வந்த அவரது உறவினரிடம் காவல் துறையினர் காலை முதல் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் மகேஷ் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் சதித் திட்டம் மற்றும் ஆதாரங்களை அழிப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.