கட்டுக்கடங்காத கூட்டம்: தேஜஸ்வி, சிவஶ்ரீ நெகிழ்ச்சி

எங்களால் முடிந்த அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்திருந்தோம். ஆனால்...
கட்டுக்கடங்காத கூட்டம்: தேஜஸ்வி, சிவஶ்ரீ நெகிழ்ச்சி
ANI
1 min read

கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா - பிரபல கர்நாடக சங்கீத பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் ஆகியோரின் காதல் திருமணம் பெங்களூருவில் கடந்த 6 அன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மார்ச் 9 அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகளவில் விருந்தினர்கள் வந்ததால் நெகிழ்ச்சியடைந்ததாகவும், அதேசமயம் இதனால் ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தேஜஸ்வி சூர்யா பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்புடைய எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"ஞாயிற்றுக்கிழமை கிடைத்த அளவற்ற அன்பும் ஆசியும் என்னையும் சிவஸ்ரீயையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

எங்களால் முடிந்த அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்திருந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பலர் வருகை தந்துள்ளீர்கள். எங்கள் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையே இது காட்டுகிறது.

அனைத்துத் தரப்பு மக்களும் வருகை தந்து எங்களை வாழ்த்திச் சென்றீர்கள். மேடைக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்பதற்காக உங்களில் பலர் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வரிசையில் காத்திருந்தீர்கள். பலர் மண்டபத்தில் இருந்த இடத்திலிருந்தே ஆசிர்வதித்தீர்கள்.

அசௌகரியம் ஏற்பட்டதற்கு நாங்கள் வருந்துகிறோம். இருந்தாலும், உங்களுடைய ஆசிக்கு நாங்கள் மிகுந்த மதிப்பளிக்கிறோம்.

இந்தளவுக்கு அன்பைச் சம்பாதிக்க நாங்கள் என்ன செய்தோம், இதற்கு நாம் என்ன கடமையாற்றப்போகிறோம் என்கிற ஆச்சர்யத்தில் நான் ஆழ்ந்துவிட்டேன். நம் நாட்டுக்கும் கலாசாரத்துக்கும் மக்களுக்கும் தன்னலமற்று எங்களை அர்ப்பணிப்பதே சரியானதாக இருக்கும்.

எங்களுடையத் துறைகளில் கடுமையான உழைப்பைச் செலுத்தி நாட்டுக்கு மிகுந்த அளவில் பங்களிப்பை ஆற்றுவோம் என இருவரும் வாக்குறுதியளிக்கிறோம். மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து, நீங்கள் எதிர்கொண்ட அசௌகரியத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்" என்று தேஜஸ்வி சூர்யா பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in