
கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கொல்கத்தா காவல் துறை சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொல்கத்தாவில் கஸ்பா பகுதியிலுள்ள சட்டக் கல்லூரியில் தேர்வுக்கான படிவங்களைப் பூர்த்தி செய்வதற்காக மாணவி கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். புதன்கிழமை இரவு 7.30 மணி மற்றும் இரவு 10.50 இடையில் இந்தச் சம்பவம் நடந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனையில் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தையும் அளித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ஸைப் அஹமது (19) மற்றும் பிரமித் முகர்ஜி (20) ஆகிய இரு மாணவர்கள், கல்லூரி ஊழியர் மோனோஜித் மிஷ்ரா (31) ஆகியோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்கள். கல்லூரியின் பாதுகாவலர் இன்று கைது செய்யப்பட்டார். இதன்மூலம், இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் துறை 5 பேர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து மத்திய அமைச்சரும் மேற்கு வங்க பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சுகந்தா மஜும்தார் உள்ளிட்டோர் கொல்கத்தா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உத்தரவின் பெயரில் தாங்கள் கைது செய்யப்பட்டதாக இவர் குற்றம்சாட்டினார்.